Saturday, March 16, 2013

லார்கோ - துரத்தும் தலை விதி & விதியோடு விளையாடுவேன்என் மன வானில்

உங்களில் எத்தனை பேர் SKY HIGH என்ற ஆங்கிலப் படத்தை பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. பிரபல தமிழ் தொலைக் காட்சியிலும் அடிக்கடி தமிழ் டப்பிங்குடன் போடுவார்கள். இளம் சூப்பர் ஹீரோக்கள் படிக்கும் ஒரு பள்ளி. முதல் நாள் அன்று மாணவர்களை ரெண்டு பிரிவாக பிரிப்பார்கள்.

1) ஹீரோ
2) எடுபிடி

எடுபிடி என்பவர் ஹீரோ வுக்கு உதவி செய்பவர். உதாரணத்துக்கு ஜேம்ஸ் பாண்டுக்கு புதிய ஆயுதங்களை தயாரித்து தரும் Q  எடுபிடி. அந்த படத்தில் எடுபிடிகள் கேவலமாக பார்க்கப் பட்டாலும், கடைசியில் அவர்கள் உதவியுடன் தான் ஹீரோ குழுவினர் ஜெயிப்பார்கள்.

லார்கோ கதையிலும் சைமன் அவ்வப்போது வந்து லார்கோ ஜெயிக்க உதவினாலும், முன்னணியில் இதுவரை லார்கோ இருந்து வந்தார். ஆனால் இந்த இரு பாகங்களில்  லார்கோ ஒரு சூழ்ச்சியில் மாட்டி தலை மறைவாக இருக்க சைமன் முன்னணிக்கு வந்து அவன் பாணியில் ஆடும்  ஆட்டம் தான்  இந்தக் கதை.

கதை
லார்கோ முதல் பாகம் படித்தவர்களுக்கு நெரியோ விஞ்ச் தன குழுமத்தில் நடக்கும் ஒரு ஊழலை கண்டிபிடித்து விட, அந்த ஊழலை செய்த கார்டினாக் நெரியொவை மாடி மீதிருந்து தள்ளி கொலை செய்தது தெரிந்து இருக்கும். பின்னர் நெரியொவின் வாரிசாக லார்கோ வந்து அந்த கார்டினாக்கை  பழிவாங்குவார். ஆனால் அந்த கார்டினாக் என்ன ஊழல் செய்தார் என்பது நமக்கு தெரியாது. அவருக்கு துணையாக இருந்த ஒரு கருப்பாடு இன்னும் விஞ்ச் குழும டைரக்டர் களில் ஒருவராக இருப்பதும் இந்த பாகங்களில் தெரியும்.

இந்த ஊழலை லார்கோ துருவ ஆரம்பித்த உடன் அவன் மீது கொலை பழி சுமத்தி உள்ளே தள்ளப் பார்க்கிறார்கள். அந்த பழியில் இருந்து வெளியே வந்தானா, ஊழல் பெருச்சாளிகளுக்கு அவன் ஸ்டைலில் எப்படி பலி வாங்கினான் என்பதே கதை.

முன்னமே சொன்னபடி லார்கோ கதையை துவங்கி மற்றும் முடித்து வைத்தாலும் இடையில்  இளம் நங்கையரின் இடையை கிள்ளுவதில் இருந்து, எதிரிகளை கொல்லுவது வரை  சைமன் செய்கிறார்.லார்கோவை தனியே அனுப்பினால் நமக்கு அவர் வரும் பகுதிகள்   போரடித்து  விடும் என்பதால்  அவருக்கும் ஒரு சீமாட்டி ஜோடியாக வருகிறார்.  

ஓவியப் பார்வை
1) விஞ்ச் குழுமத்தின் கட்டிடத்தை எத்தனை விதமாக வரைந்திருக்கிறார் பாருங்கள். இரவில், சூரிய ஒளியில் மற்றும் இளம் மாலை சூரிய ஒளியில் என்று பின்னி எடுக்கிறார். ஷெல்டனில் ட்ரக்குகளின் ஓவியங்களைப் பார்த்து அவற்றின் மீது காதல் கொண்டால், இப்போது கட்டிடங்களின் மீது காதல் வரும்படி வரைந்திருக்கிறார்.
2) கடலும் கடல் சார்ந்த ஓவியங்கள் வாவ் என சொல்ல வைப்பவை..
3) கதையே விஞ்ச் ஏர் பற்றி இருப்பதால் நிறைய பிரம்மாண்டமான விமானங்களை பார்க்கலாம்.

 


4) வெடித்து சிதறும் கப்பல்.5) பறவைப் பார்வையில் ஒரு நதி


6) நெதர்லேண்ட்சின் நதியும் அதன் அருகாமையில் உள்ள கட்டிடமும்.

7) விமானம் வெடித்தவுடன் எல்லோருடைய ரியாக்சனையும் ஒரே கட்டத்தில் கொண்டு வந்திருப்பதை கவனியுங்கள். அதில் சைமனின் ரியாக்சனையும், லார்கோவின் ரியாக்சனையும் கவனித்தீர்களா? வெற்றிப் புன்னகை சைமன் முகத்தில், லார்கோ முகத்தில் செய்ய விருப்பம்  இல்லாததை செய்த ஒரு வருத்தம் தெரிவதை பாருங்கள்.

பஞ்ச் டயலாக்ஸ்

1) சீரியசாக விஞ்ச் ஏர் பற்றி விளக்கி சொல்லி  விட்டு "உங்களுக்கு எதுவும் கேட்கணுமா சார்" என்று கேட்க சைமன் அலட்டிக் கொள்ளாமல் " ஆமாப்பா, இங்கே பாத் ரூம் எங்க இருக்கு?" என்று கேட்பது.2) "மிஸ்டர் தலைமை நிர்வாகி " என்று வினோதமான உடையில் உள்ளே நுழையும் சைமன்


3) "அடடே நம் அழகு தேவதை சொலான்ஞ் எங்கே பதுங்கி இருந்தார் ?" என்று கேட்கும் லார்கோ.


4) இந்த நாலு பேனல் வசனங்களும் நான் மிகவும் ரசித்தவை.


5) "ஊப்ஸ் உங்கள் உத்தம சிந்தனையை கேட்டவுடன் ஆடிப் போய் விட்டேன்" என்று தண்ணீரை கொக்ரேன் மீது ஊற்றும் லார்கோ.6) "உத்தரவு மகாராஜா, மிஸ்டர் தாத்தாஸ் என்ஜாய் " என்று நக்கல் விடும்  சைமன்.7) சைமனை ஏன் விலங்கிட்டு இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்க்கு சைமன் சொல்லும் பதில் 
8) கொடுத்த 'புள்ளிமான்' பட்டத்தை அவசரமாக வாபஸ் பெரும் சைமன். சைமனின் தொல்லைகள் முடிவதில்லை.

முரண்
1) கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தும் அதிகம்  எழுத்துப் பிழைகள் இல்லாமலிருப்பது ஆறுதல்.

ஆனால் பெயர்க் குழப்பம் இன்னும் நீடிக்கிறது. ஆனால் மிகச் சிறிய  வித்தியாசங்களுடன்.

டோனாஹியு என்ற பேர் சில இடங்களில் டோனாஹ்யு ஆகி இருக்கிறது.


2) சொலான்ஞ் என்பது ஒரு இடத்தில ஸோலான்ஞ்  ஆகியிருக்கிறது.

3) க்விக் கவிக் என்று ஆகி இருக்கிறது.3) ஷெல்டனில் பலூன் மீது பலூன்  வைத்து  இருப்பதை சொல்லி இருந்தோம். இந்த  முறை அப்படி இல்லை. ஆனால்  வசனமே இல்லாமல் வெற்று பலூன் இருக்கிறது.

வசனத்தை வெளியே போட்டு விட்டு பலூனை எடுக்க மறந்திருக்கிறார்கள்.


4) பக்கம் 38 இல் கடைசி பேனலில் இருக்கும் பலூனுக்குள் மூன்று
கருப்பு வட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. எழுத்துரு கோளாறா அல்லது என்னால் விளங்கி கொள்ள முடிய வில்லையா?க்ளைமாக்ஸ்

லார்கோ வீசும் கத்தியைப் போல கதை எந்த இடத்திலும் சோடை போகாமல் விறு விறுவென்று போகிறது. விமானத்தில் தொடங்கி விமானத்தில் முடியும் இந்த இரு பாகங்களும் சூப்பர்.

சைமன் மற்றும் லார்கோவின் எதைப் பற்றியும் கவலைப் படாத மனப் போக்கையும், குறும்பையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்ததில் மொழி பெயர்த்தவர்    (எடிட்டர் ?)  மிளிர்கிறார்.

எடிட்டரின் கத்திக்கு தப்பிய சில பக்கங்கள் மட்டுமே நெருடுகின்றன.
_____________________________________________________________________________________

சென்சார் பற்றி 

எல்லோரும் படிப்பது போல் இருக்க சென்சார் அவசியம். அதை எடிட்டரிடம் விட்டு விடலாம். கவனப் பிசகு நேரும் போது சுட்டிக் காட்டலாம். காலப் போக்கில் சரியாகி விடும்.

சின்ன பசங்க படிக்க கூடாது, பெரிய புள்ளைங்களுக்கு மட்டும், வயசுக்கு வந்தவர்களுக்கு
மட்டும் என்று டேக் போடுவது என்பதெல்லாம் இங்கே வேலைக்கே ஆகாது. ப்போதான் புள்ளைங்களுக்கு வாங்கி குடுக்க ஆரம்பிச்சு  இருக்காங்க  அதுக்கும் ஆப்பு வச்சுறாதீங்க மக்களா. அப்பிடி பண்ணினால் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்ட கதைதான்.

என்னைப் பொறுத்தவரை அதிக பட்சமாக ஒரு ஐந்து சதவீதம் தான் சென்சார் பண்ணலாமா வேணாமா என்று யோசிக்க வைக்க கூடிய பக்கங்கள். அவற்றில் சிறு திருத்தங்கள் பண்ணி கதையின் ஜீவன் கெடாமல் கொடுக்க எடிட்டரால் முடியும். அந்த ஐந்து சதவீத பக்கங்களுக்காக 15+ என்றோ 18+ என்றோ போடுவது நிச்சயம்  விற்பனையை பாதிக்கும். ஆங்கில புத்தகங்களுக்கு  வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். சின்ன சந்தை உள்ள நமக்கு அது தேவை இல்லாத வேலை. 

வன்முறைக்கும் சென்சார் என்று நான் சொன்னதற்கு காரணம் பக்கம் 21 லும் 73 லும் தெறிக்கும் ரத்தம். இவ்வளவு ரத்தம் தேவையா? சில நேரங்களில் அந்த பேனலை சென்சார் பண்ண முடியாது. உதாரணத்துக்கு பக்கம் 11 இல் இருக்கும் தலை. அதை அப்படியே தூக்கி விட்டு அந்த இம்பேக்ட்டை கொண்டு வருவது சத்தியமே இல்லை.

மற்றபடி துப்பாக்கியே தூக்க கூடாது என்று சொன்னால் பாவம் டெக்ஸ் வில்லரும் , ஜேம்ஸ் பாண்டும் என்ன செய்வார்கள்.       

அதனால் என் வோட்டு ஆபாசத்துக்கு ஸ்ட்ரிக்ட் சென்சார் வேண்டும். வன்முறைக்கு கதையின் ஓட்டம் கெடாத வகையில் சென்சார் வேண்டும்.

____________________________________________________________________________________


* திட்டுரவுங்கோ திட்டுங்கோ இது என் கருத்து தான். உங்களுடைய கருத்தும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது.என் கருத்தை ஒத்துக் கொள்ளுகிறவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் என் கருத்தை பதிவு செய்வது முக்கியம். அதை செய்து விட்டேன்.


Post Comment

14 comments :

 1. முதலில் ஓவியங்களை நீங்க பார்க்கும் பார்வைக்கு ஒரு வாவ்.
  உங்களுடைய பதிவுகளை பார்த்ததில் இருந்துதான் நான் மேலும் சிறிது ஓவியனளின் ரசிக்கிறேன்.அப்படியும் அந்த கட்டிடத்தின் மாற்றத்தை கவனிக்கவில்லை.

  அடுத்து பெரும்பாலும் பெயர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுபதில்லை அவர்களது முகத்தை நினைவுகொண்டே கதைகளை படிப்பேன்.ஆனால் லார்கொ கதைகளை அது சிறிது சிரமமாக இருக்கிறது.ஓவியர் பலரை ஒரே மாதிரி வரைந்து சிறிது மாற்றம் தருகிறார்.

  உதாரனத்திற்கு டோனாஹியு & கொக்ரேன் இருவரும் ஒரே மாதிரி இருகின்றனர்.ஒரே வித்தியாசம் டோனாஹியுவிற்கு முன்புறம் சிறிது சுருள் முடி இருக்கிறது.எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகின்றத இல்லை அனைவருக்கும என்று தெரியவில்லை.

  சென்சாரை பொருத்தவரை லார்கோவும் ஷெல்டனும் எனக்கு வேண்டும் அதனை நீங்கள் எப்படி தந்தாலும் சரி.கதையின் போக்கு மாறது இருக்கும் வரை ஓகே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிருஷ்ணா . டோனாஹியு & கொக்ரேன் ஒரே மாதிரி தான் இருகிறார்கள். எனக்கும் அந்த குழப்பம் வந்தது.

   Delete
 2. அருமையான பதிவு. ஒவ்வொரு இதழ் வந்ததும் உங்கள் தனிப்பாணியிலான ஆராய்வை படிக்க காத்திருப்பேன். இம்முறையும் அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பதிவை ஆசிரியரும் படித்துவருகிறார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பொடியன் அவர்களே. என் பதிவை ஆசிரியர் படிக்கிறாரா என்று தெரியாது. படிப்பார் என்ற நம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு காமிக்ஸ் போஸ்டும் போடுகிறேன்.

   Delete
 3. //டோனாஹியு & கொக்ரேன் இருவரும் ஒரே மாதிரி இருகின்றனர்//
  நான் கண்ணாடி வித்தியாசத்தை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்.


  நல்ல விரிவான பதிவு. இப்பொழுது லார்கோ காலம் என்பது மறுக்க முடியாத உண்மை

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்டாலின் அவர்களே. நான் சுருள் முடி வைத்துதான் கண்டுபிடித்தேன்.

   Delete
 4. வழக்கம்போலவே ரசிக்க வைத்த பதிவு! ராஜ் குமாரின் பார்வையில் அற்பமானவைகூட அழகுபெற்று விடுகிறது!
  விமர்ச்சனத்தை கொஞ்சம் வேகமாகச் சொல்லிவிட்டு அவசர அவசரமாக சென்ஸார் பற்றிய உங்கள் கருத்துக்குத் தாவி விட்டதைப் போலிருந்தது.

  சென்ஸார் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் முழுக்கவே ஒத்துப்போகிறேன். மனதிலிருப்பதை மற்ற 'முகங்களுக்காக' மறைக்காமல், தைரியமாக வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்! ;)

  ReplyDelete
  Replies
  1. விஜய் மறுபடி ஐகானை மாற்றி விட்டீர்களா ? உங்கள் பூனை எதை பார்த்து இப்படி பயப்படுகிறது? ஒரு வேளை சென்சாரைப் பார்த்தோ :D ?

   சென்சார் பற்றி ஒரு பக்கம் கூட எழுத வில்லை நண்பரே. மற்றதெல்லாம் ளார்கோ தானே? ஒரு வேலை சென்சார் மட்டும் தான் மனதில் நின்றதா? தனி பதிவாக போட நினைத்து பிறகு இதிலேயே போட்டு விட்டேன்.

   Delete
 5. இதுவரை வந்த லார்கோ கதைகளில் என்னை அசத்திய கதை இது தான். விமானம் வெடித்தவுடன் அனைவரின் ரியாக்சன்களையும் காட்டும் சித்திரம் அட்டகாசம். ஒரு அருமையான ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை தந்தது.

  /*லார்கோ முகத்தில் செய்ய விருப்பம் இல்லாததை செய்த ஒரு வருத்தம் தெரிவதை பாருங்கள்.*/
  சூப்பரான கோணத்தில் பார்த்துள்ளீர்கள். நீங்கள் சொன்ன பின் தான் இந்த கோணத்தில் நான் பார்த்தேன்.

  கடற்கரை சார்ந்த ஓவியங்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி லக்கி. விறுவிருப்பில் ஹாலி வுட் படங்களை மிஞ்சக் கூடியது

   Delete
 6. நன்றி ஜி, சென்ஸ்சாரை தானே சொல்லுறீங்க ?

  ReplyDelete
 7. உங்கள் பதிவைப் படிக்கும் முன்பே.. இவர் சொல்லும் சித்திரங்களை நாம் பதிவு படிக்கும் முன்பே கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால்.. அந்த கட்டிடம் பல வித ஒளிகளில் வரையப் பட்டிருப்பதை, நீங்கள் குறிப்பிட்டதும் தான் அறிந்தேன். அதே போல.. விமானம் வெடித்தபின் அனைவரின் முக பாவனைகள்..

  கழுகு கண் உங்களுக்கு.

  வசனமும், கதையும், டீடெயிங்கும் இந்தக் கதையில் பிரம்மாதம்.

  ReplyDelete
 8. @RMAG75
  //சித்திரங்களை நாம் பதிவு படிக்கும் முன்பே கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்..//

  ஆஹா இப்படி ஆரம்பிச்சுடீங்களே.

  //அந்த கட்டிடம் பல வித ஒளிகளில் வரையப் பட்டிருப்பதை, நீங்கள் குறிப்பிட்டதும் தான் அறிந்தேன். அதே போல.. விமானம் வெடித்தபின் அனைவரின் முக பாவனைகள்..

  கழுகு கண் உங்களுக்கு.

  //

  நன்றி RAMG

  ReplyDelete