Wednesday, November 28, 2012

எல்.கே.ஜி., சீட் 17 லட்சம் - பெற்றோர்களை சுரண்டும் பள்ளிகள்


இது நேற்று தினமலரில் வந்த செய்தி. ஒரு தந்தை L K G சீட்டுக்காக 17 லட்ச ரூபாயில்
கூடைப்பந்து மைதானம் கட்டி கொடுத்திருக்கிறார். எங்கடா போகுது இந்த நாடு. ஒங்க
பேராசைக்கு அளவே இல்லையா? நான் அந்த பள்ளியை சொல்லவில்லை. 17 லட்ச ரூபாய்
செலவழித்து சீட் வாங்கிய அந்த முட்டாள் அப்பனை சொல்கிறேன்.  தன் மகன் இந்த பள்ளியில்
படிக்கிறான் என்று பீற்றி கொள்வதற்காக 17 லட்ச ரூபாயை செலவளித்தவனை வேறு என்ன
சொல்ல.


LKG சேர்ப்பதற்கு ஒரு லட்சம், அப்படி சேர்க்காமல் நடுவில் எல்லாம் சேர்க்க முடியாது
 என்று செயற்கையாக  தேவையை உருவாக்கி அதில் குளிர்காய்கின்ற சில பள்ளிகளின்
லட்சணத்தை சில மாதங்கள் முன்பு ஒரு இயக்குனரின் மகன் சாவின் போது பார்த்தோம்.
என்னை பொறுத்த வரையில் பள்ளிகளின் இந்த மனப்போக்கிற்கு மக்கள் தான் காரணம்.
முன்பெலாம் பள்ளிகளில் மாணவர்கள் நல்ல மார்க் வாங்க வில்லையா? இப்போதும் கூட
நான் படித்த என் ஊரில் இருக்கும் "முஸ்லிம் மேனிலை பள்ளியில்" முதல் குரூப்பில் முதல்
மதிப்பெண்   1100க்கும் மேலே. தேவை இல்லாமல் நிறைய பீஸ் வாங்கும் பள்ளியில்தான்
நன்றாக சொல்லி கொடுக்க படுகிறது என்பது முட்டாள்தனம்.

 IIT  Coaching
இதில் சில பள்ளிகள் 7ம் வகுப்பில் இருந்தே IIT க்கு தயார்ப்படுத்துகிறோம் என்று தங்களுக்கு
பெயர் தேடி கொள்கிறார்கள். அதற்க்கு தனி கட்டணம் என்று காட்டு காட்டு என்று காட்டி
விடுகிறார்கள்.  IIT க்காக தன்  மகனை இன்னொரு பள்ளிக்கு மாற்றிய ஒரு நண்பர் பகிர்ந்த
 தகவல். அவர் பையன் ஏதாவது சந்தேகம் என்று ஆசிரியரிடம் கேட்டால், அங்கு நன்றாக
 படிக்கும் ஒரு பையனிடம் கேட்க சொல்லிவிட்டு சென்று விடுகிறார்" என்று சொல்லி
இருக்கிறான். எனக்கு அவனிடம் அடிக்கடி சென்று கேட்கவே சங்கடமாக இருக்கிறது
என்று சொல்லி இருக்கிறான். பிள்ளைகளின் தாழ்வுமனப் பான்மை கிளறிவிடும் செயல்
இது.

தவிர இந்த பள்ளியில் புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுத சொல்லுகிறார்கள்,
கொஞ்சம் மாற்றி எழுதினாலும் ஒத்துக் கொள்ளாமல் மதிப் பெண்ணை குறைத்து
விடுகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறான். மற்றுமொரு செய்தி அந்த பள்ளியில்
"சயின்ஸ் ஒலிம்பியாட்" போன்ற போட்டிகள் நடக்கும் போது  விருப்பம் இருக்கிறதோ
இல்லையோ எலோரையும் பங்கெடுக்க வைக்கிறார்கள் என்பது.

முழுதாக சுருட்டுவது பள்ளியில் சேர்க்கும் போதும் / வருடம் முதலில் முடிந்து விட்டாலும்
அவ்வப்போது சுருட்டுவது சகஜமாக நடக்கும். சில உதாரணங்கள் கீழே

1) "Fancy Dress Competetion" இதற்கும் கட்டணமாக ரூ 50 அல்லது 100 வாங்கி
விடுகிறார்கள். பக்கத்தில் உள்ள செட் ப்ரோபெர்டிஸ் கடைகளுக்கு இவர்களுக்கும் ஒரு லிங்க்
இருக்கலாம்.

2) "Drawing Competetion" இதற்கும் கட்டணமாக ரூ 50 அல்லது 100 வாங்கி விடுகிறார்கள். இதில்
பள்ளி கொடுக்கும் முதல் பரிசு ரூ 100 க்கு கூட மதிப்பு இல்லாமல் இருக்கிறது.

3) Junk Food Marketing
உச்ச கட்டமாக  இப்போது பள்ளிகள் மூலம் மார்கெட்டிங்கில் இறங்கி இருக்கிறார்கள்
அயல் நாட்டு ஜன்க் புட் தயாரிப்பவர்கள். சமீபத்தில் என் பையனும், என் பெண்ணும் "அப்பா
எனக்கு இது வாங்கி தர வேண்டும்" என்று அடம் பிடித்தார்கள். ஜன்க் புட் என் வீட்டில்
தடை செய்யப்பட்டுள்ளது. தடை போட்டது நான் என்றாலும் என் வீட்டு அம்மா
அனுமதியுடன்  எனக்கு தெரியாமல் மொக்கி விட்டு நான் ஜன்க் புட் எவ்வளவு கேடுதல்
 தெரியுமா என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு
இருப்பார்கள்.

அந்த ப்ராண்ட் மிகவும் அறிமுகமானது கூட கிடையாது. ஏன் அடம் பிடிக்கிறார்கள் என்று
பார்த்தால், அவர்கள் ஆசிரியர்  ஒரு தாளை கொடுத்து விட்டிருக்கிறார்கள். அதில் அந்த
பிராண்ட்  தின்பண்டத்தை வாங்கி தின்று விட்டு அந்த கவரை ஒட்டி, ஒரு ஸ்லோகன்
எழுதி ஆசிரியரிடம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

ஆகா பிள்ளைகள் கழுத்தில் கத்தியை வைத்து அந்த கால சினிமாவில் வில்லன்
மிரட்டுவது மாதிரி அல்லவா இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு "நான் வாங்கி
கொடுக்க முடியாது. நான் உங்கள் ஆசிரியரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று சொல்லியதற்கு
முனகிக் கொண்டே போய் விட்டார்கள். அடுத்த நாள் ஆசிரியரிடம் ஏன் ஜன்க் புட்டை
 மார்கெட் பண்ணுகிறீர்கள் என்று கோபத்துடன் கேட்டதற்கு "நான் என்ன செய்யுறது சார்
மேனேஜ்மென்ட் சொல்லுறத நாங்கள் செய்யுறோம்" என்றார். அவரையும் சொல்லி
குற்றமில்லை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் இதைப் பற்றி பேசலாம் என்று இருக்கிறேன்.


* உங்கள் பிள்ளைகள் கேட்டாலும் சரி என்றால் மட்டுமே அனுமதியுங்கள். தேவை
இல்லாமல் உங்களை சுரண்ட அனுமதிக்காதீர்கள்
.

Post Comment

4 comments :

 1. கவலை தரும் விஷயம்! :(

  ReplyDelete
 2. ரொம்ப பயமா இருக்கு நண்பரே.
  நம்ம குழந்தைகளின் எதிர்காலத்தை விட நமது எதிர்காலம் மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

  ReplyDelete
 3. ரொம்ப பயமா இருக்கு. என் பொண்ண அடுத்த வருஷம் ஸ்கூல் ல சேக்கணும். இதெல்லாம் கேக்கும் போதே எதோ பண்ணுது :(

  ReplyDelete
 4. Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.

  ReplyDelete